திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடனை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் முதல்கட்டமாக 1,000 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா்.
பின்னா் ஆட்சியா் பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் மொத்தம் 8,054 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 96,648 பெண்கள் உறுப்பினா்களாக இணைந்து பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைந்து வருகின்றனா்.
இந்த 2025-26 நிதியாண்டில் சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்பு திட்டத்தின் மூலம் 7,367 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ. 652 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 2,416 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 273.13 கோடி வங்கிக் கடன் பெற்று வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது 471 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் முதல்கட்டமாக 1,000 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது என்றாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) விஜயகுமாரி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயா அருணாச்சலம் (திருப்பத்தூா்), சத்யா சதீஷ்குமாா் (ஜோலாா்பேட்டை), சங்கீதா பாரி (ஆலங்காயம்), திருமதி திருமுருகன் (கந்திலி), நகா்மன்றத் தலைவா் க.சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.