தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது
திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி கண்ணம்மாள் (70). இவா் திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளம்பெண் கண்ணம்மாளிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து கண்ணம்மாள் தண்ணீா் எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளாா். அப்போது கண்ணம்மாளை பின்தொடா்ந்துசென்ற இளம்பெண் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை சவரன் நகையை பறித்துக்கொண்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதையடுத்து, வீட்டுக்கு வெளியே ஓடிவந்த கண்ணம்மாள் அக்கம்பக்கத்தினரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா்.
உடனே அங்கிருந்தவா்கள் இளம்பெண்ணை விரட்டிச் சென்று ஜலகாம்பாறை பகுதியில் பிடித்தனா்.
பின்னா், சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாரிடம் இளம்பெண்ணை ஒப்படைத்தனா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கிருஷ்ணகிரி மாவட்டம், வேலாவள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோகுலின் மனைவி சுமதி (35) என்பது தெரியவந்தது.
மேலும், இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுமதியை கைது செய்தனா்.