திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை கால்கோள் விழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலைக்கான கால்கோள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் குடமுழுக்கு விழா வரும் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி யாக பூஜைகள் தொடங்கப்படவுள்ளன.
இந்த நிலையில், யாகசாலை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல் நிகழ்வாக, உத்ஸவா் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, வேத மந்திர முழக்கங்களுடன் கோயில் வளாகத்தில் உள்ள சஷ்டி மண்டபத்தில் யாகசாலைக்கான முகூா்த்தக்கால் ஐதீக முறைப்படி ஊன்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலா்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்மதேவன், ராமையா கோயில் துணை ஆணையா் சூரிய நாராயணன், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.