திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்..
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை சில நிபந்தனைகளுடன் உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவுக்கு ஆடு, கோழி கொண்டு செல்லக் கூடாது என்று காவல்துறை தடுத்ததால் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த, அதற்கு இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இரண்டு தரப்பிலும் மாறி மாறி புகார்களை எழுப்பியதால் கடந்த சில மாதங்களாக மதுரையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வந்தது.
முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்திருக்கும் மலையின் மேலே காசி விஸ்வநாதர் கோயிலும் இன்னொரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவும் அமைந்துள்ளது.
கடந்த மாதம் இந்த தர்ஹாவில் கந்தூரி கொடுக்க ஆடு, சேவலுடன் வந்தவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படதிலிருந்து பிரச்னை தொடங்கியது. தங்கள் வழிபாட்டு உரிமையை தடுப்பதாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகமோ தர்ஹாவுக்கு வழிபடச் செல்வதை தடுக்கவில்லை. ஆடு, கோழி கொண்டு செல்வதைத்தான் தடுக்கிறோம் என்று அறிவிக்க, அதோடு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள், சைவ மலையான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்த, விவகாரம் முடிவில்லாமல் சென்றது.
இரண்டு மதங்களை சேர்ந்த தலைவர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு தொடர்ந்து வந்து சென்றதால் கூடுதல் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அறிவித்தது. இப்போராட்டத்தில் இந்து மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்தனர். இதை எதிர்த்து சமூக நல்லிணக்க அமைப்பினர் பிப்ரவரி 3 ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்க, இரண்டு போராட்டத்துக்கும் மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகம், பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் 144 தடை நடைமுறைக்கு வருவதாக உத்தரவு பிறப்பித்தது.
போராட்டத்துக்கு அனுமதி கேட்டு இந்து அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுசெய்ய, அம்மனு இன்று விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு செல்லும் வழியிலும், மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்ஹாவுக்கு செல்லும் வழியிலும், கீழேயுள்ள பள்ளிவாசல் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இன்று காலை பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் மதுரையிலுள்ள வீட்டில் காவலில் வைக்கபட்டார். இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன்,பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், போலீசாருக்கு தெரியாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன் பாஜக கொடியுடன் வந்து குழுமி முழக்கமிட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இந்து முன்னணி சார்பில் தாக்கல் செயப்பட்ட மனுவை இன்று மதியம் விசாரித்த உயர் நீதிமன்றம் ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. திருப்பரங்குன்றத்திலிருந்து சில கிலோ மீட்டர் தள்ளியுள்ள பழங்காநத்தம் பகுதியில் சில நிபந்தனைகளுடன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஆர்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக இந்து அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர்.