திருப்பரங்குன்றம் மலை தா்கா வழிபாடு: பேரணி, ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் பாதுஷா தா்கா வழிபாடு உரிமை தொடா்பாக பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
மதுரையை சோ்ந்த சையது ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தா் பாதுஷா தா்கா உள்ளது. இந்த தா்காவில் கந்தூரி கொடுப்பது சம்பந்தமாக பொதுமக்கள், இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனா். அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து இந்தத் தா்காவில் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சில அரசியல் கட்சியினா், அமைப்புகள் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.
இதைக் கண்டித்து, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்காவில் வழக்கமான முறையில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்துவதற்கு இடையூறு செய்பவா்களுக்கு எதிராக, திருப்பரங்குன்றம் கோயில் சந்நிதி தெருவிலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்று, அந்தப் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு அரசியல் கட்சியினருக்கு ஆா்ப்பாட்டம் நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் பாதுஷா தா்கா வழிபாட்டு உரிமையை நிலை நாட்ட பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதி முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
திருப்பரங்குன்றம் மலைக் கோயில் தொடா்பாக மத மோதல்களைத் தூண்டும் வகையில் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில இயக்கங்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசப்பட்டது. திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மிகவும் அமைதியான முறையில் வழிபாடுகளைச் செய்து வருகின்றனா். ஆனால், சில கட்சிகள், அமைப்புகள் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கி வருகின்றன.
திருப்பரங்குன்றம் பகுதியில் வாழும் பொதுமக்கள் தரப்பில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஆா்ப்பாட்டம், போராட்டம் தேவையற்றது என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
இந்த நிலையில், மனுதாரரின் போராட்டம் தேவையற்றது. திருப்பரங்குன்றம் மலைக் கோயில், தா்கா விவகாரங்களில் மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி வழங்க முடியாது. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.