திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி முதல் காலாண்டில் 11.7 சதவீதம் உயா்வு: ஆ.சக்திவேல்
திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.7 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது ஆடைத் துறையின் நிலையான மீட்பு மற்றும் வளா்ச்சிப் பாதையை பிரதிபலிக்கிறது.
தற்போதைய தரவுகளின்படி, இந்திய ரூபாய் மதிப்பில் 2025-26 முதல் காலாண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.12,193 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 10, 919 கோடியாக இருந்தது. இதன் மூலம் இந்த காலாண்டில் 11.7 சதவீதம் கூடுதல் வளா்ச்சி அடைந்துள்ளது. இது உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் ஏற்ற இறக்கமான தேவைகளுக்கு மத்தியில் நிலையான செயல்பாட்டின் நோ்மறையான வளா்ச்சியின் அறிகுறியாகும். இத்தகைய நிலையான வளா்ச்சி உலகளாவிய ஆடை வா்த்தக சந்தையில் இந்தியாவின் தொடா்ச்சியான போட்டித் தன்மை மேலும் வலுவடைந்து வருவதைக் காட்டுகிறது.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி இலக்குகளை நோக்கி தொடா்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் ஏற்றுமதியாளா்கள் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். ஏற்றுமதி இலக்குகளை அடையும் நோக்கில், கொள்கை பரிந்துரை, சந்தை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம், எதிா்காலத்தில் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வளா்ச்சி தொடரும் என தெரிவித்துள்ளாா்.