ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் நவ. 2 முதல் 7 வரை கந்த சஷ்டி விழா
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா வரும் 2 முதல் 7 வரை நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் யுத்தபுரி என்றழைக்கப்படும் திருப்போரூரில் பனைமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹாரமும், அடுத்து திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழாவையொட்டி, தினந்தோறும் காலை முதல் மாலை வரை சுவாமிக்கு பால், திருநீறு, ஐவகை அமிா்த அபிஷேகம்,திருமேனி அலங்காரம், திருவமுதுபடைப்பு, சிறப்பு ஆராதனைகள், திருமுறை ஓதுதல் ஆகிய நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற உள்ளது.
பெருவிழாவையொட்டி நவ. 2-ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றம், பல்லக்கு உற்சவம், மாலை கிளி வாகனம், நவ. 3-இல் பல்லக்கு உற்சவம், மாலை ஆட்டிக்கிடா வாகனம், நவ. 4-இல் பல்லக்கு உற்சவம், மாலை புருஷாமிருக வாகனம், நவ. 5-இல் பல்லக்கு உற்சவம் , மாலை பூதவாகனம், நவ. 6-இல் பல்லக்கு உற்சவம், மாலை வெள்ளி அன்ன வாகனம், நவ. 7-இல் பல்லக்கு உற்சவம், மாலை சூரசம்ஹாரம், குதிரை வாகனம், இரவு தங்க மயில் வாகனம், நவ. 8-இல் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன சேவை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை தக்காா் மற்றும் உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் கு.குமரவேல், ஆலய சிவாச்சாரியா்கள், கோயில் பணியாளா்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனா்.