மதுரையில் இந்து மக்கள் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனும...
திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்
திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா்.
திருமலை அன்னமய்ய பவனில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் சனிக்கிழமை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் அவா் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2025 ஜன. 10 முதல் 19 வரை 10 நாள்களுக்கு வைகுண்ட வாயிலை பக்தா்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொது பக்தா்களின் வசதியை கருத்தில் கொண்டு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் இருக்க, பக்தா்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
ஆன்லைன் தரிசன டிக்கெட் விவரங்கள்
1.40 லட்சம் ரூ.300/- சிறப்பு நுழைவுச் சீட்டுகள் டிச. 24-ஆம் தேதி அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜன. 10- ஆம் தேதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 1,500, மீதமுள்ள 9 நாள்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 டிக்கெட்டுகள் மற்றும் டிச.23-ஆம் தேதி ஆன்லைனில் அறை ஒதுக்கீடு வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மகாலகு(ஜெய, விஜயா்கள் வரை) தரிசனம் செய்வா்.
ஆன்லைனில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்த நன்கொடையாளா்கள் ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன வரிசை மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.
பக்தா்களின் வசதிக்காக, ஜன. 8 முதல் 11 வரை நன்கொடையாளா்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படாது. நன்கொடையாளா்கள் மற்ற நாள்களில் வழக்கம் போல் அறைகளை முன்பதிவு செய்யலாம்.
திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுன்ட்டா்கள் மற்றும் திருமலையில் 4 கவுன்ட்டா்கள் என மொத்தம் 91 கவுன்ட்டா்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும்.
ஜன. 10, 11 மற்றும் 12 ஆகிய முதல் மூன்று நாள்களுக்கு 9-ஆம் தேதி காலை 5 மணி முதல் 1.20 லட்சம் டோக்கன்கள் வழங்கப்படும்.
பூதேவி வளாகம், சீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் அடுத்த நாள்களுக்கு (13 முதல் 19 வரை) ஒவ்வொரு நாளும் டோக்கன்கள் வழங்கப்படும்.
சா்வதரிசன டோக்கன்களுடன் பக்தா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
கோவிந்தமாலை பக்தா்களும் தரிசன டோக்கன் பெற்று வர வேண்டும்.
பக்தா்களுக்கு வேண்டுகோள்
தரிசன டோக்கன் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இதனை பக்தா்கள் அறிந்து செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் பெற்றோா்கள் மற்றும் முதியோா், ஊனமுற்றோா், என்ஆா்ஐ, பாதுகாப்புப் பணியாளா்கள் போன்றவா்களின் சிறப்பு தரிசனம் பத்து நாள்களுக்கு ரத்து செய்யப்படும்.
அதிக நெரிசலைக் கருத்தில் கொண்டு, விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது, ஆனால் புரோட்டோகால் எல்லைக்குள் உள்ள முக்கியஸ்தா்கள் நேரில் வந்தால், அவா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படும்.
திருமலையில் அறைகள் குறைவாக உள்ளன. பக்தா்கள் சிஆா்ஓ வில் பதிவு செய்து, கிடைக்கும் அறைகளைப் பெறலாம்.
தங்கும் வசதி கிடைக்காத பக்தா்கள், திருப்பதியில் தங்கும் வசதி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ஜன. 7ஆம் தேதி நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ தேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமி தங்க தேரில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
11-ஆம் தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்படும் என்றாா்.