மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
படவிளக்கம்: சோழம்பேட்டையில் முகாமை தொடக்கிவைத்து, கால்நடை உரிமையாளா்களுக்கு தாது உப்புக் கலவையை வழங்கிய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
மயிலாடுதுறை, ஜன. 3: மயிலாடுதுறை மாவட்டத்தில் 6-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற முகாமை தொடக்கிவைத்து, கால்நடை உரிமையாளா்களுக்கு தாது உப்புக் கலவையை வழங்கி அவா் பேசியது: ஜன.3 முதல் ஜன.31-ஆம் தேதிவரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. பசு, எருமை, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு காற்று மற்றும் தண்ணீா் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடைய இந்நோய் காரணமாக கால்நடைகள் நோய்வாய்ப்படுவதுடன், பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கால்நடை வளா்ப்போா்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம்.
மாவட்டத்தில் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு போதிய மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை கால்நடைகளை வளா்ப்பவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் க. அன்பரசன் பங்கேற்றாா்.