திருவண்ணாமலையில் எதிர்காலத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்: ஐஐடி நிபுணர் குழு
திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலையில் எதிர்காலத்திலும் நிலச்சரிவுகள் நேரிடும் அபாயம் இருப்பதாக ஐஐடி மண் பரிசோதனை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலை மீது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை நடத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஓய்வுபெற்ற ஐஐடி நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் திருவண்ணாமலைக்கு நேரில் சென்று ஆய்வுப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும், வீடுகள் கட்டப்பட்டிருக்கும் இடங்களிலும் மண்ணை எடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலையில், எதிர்காலத்திலும் இதுபோன்ற நிலச்சரிவுகள் நேரிடும் அபாயம் இருப்பதாகவும் பலத்த மழையோ மிதமான மழையோ பெய்தால் அபாயம் இல்லை, ஆனால் கனமழை தொடர்ந்து பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகும் என எச்சரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், மலைக்கு அருகே வீடுகள் கட்டுவோர், உரிய பொறியாளர்களிடம் இருந்து பாதுகாப்பு அனுமதி பெற்றபிறகே வீடுகள் கட்ட வேண்டும் என்றும், மண் பரிசோதனை ஆய்வறிக்கை தமிழக அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் மண் பரிசோதனைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து பெய்த கனமழையால், 2668 அடி உயர மகா தீபம் ஏற்றும் மலையின் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்திலிருந்து படிப்படியாக மலை மீது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், வீடுகள் நிறைந்த ஓரிடத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சில வீடுகள் பலத்த சேதமடைந்து. அதிலிருந்தவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் மகா தீபம் ஏற்றும் 2668 அடி உயர மலை உள்ளது. திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மலையை ஆக்ரமித்து பலர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளனர்.
இதனிடையே, ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறு இரவு வரை இடைவிடாமல் தொடர் மழை பெய்தது. ஞாயிறு மாலை 5 மணிக்கு திடீரென மகா தீப மலையை ஒட்டியுள்ள வ.உ.சி. நகர், 11வது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது மண்ணுடன் பெரிய பெரிய பாறாங்கற்கள் மலை உச்சியில் இருந்த குடிசை வீடு உள்பட பல வீடுகள் மீது விழுந்தன. மேலும் சேறும் சகதியுமான மண் 8 வீடுகளுக்குள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இதில் வீட்டுக்குள் இருந்த 7 பேர் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணி தொடங்கிய நிலையில், நேற்று மாலை ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு வரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்று காலை மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 7 பேரின் உடல்களும் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், எதிர்காலத்திலும் திருவண்ணாமலை மலையில் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை ஐஐடி நிபுணர் குழு அளித்திருக்கிறது.