64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
திருவண்ணாமலை: `முக்தி அடைந்து, இறைவனை நோக்கிச் செல்கிறோம்’ - ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சூரியலிங்கம் அருகே தனியாருக்குச் சொந்தமான `டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே’ என்ற பெயரில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது.
இந்த பண்ணை வீட்டில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மகா காலவியாசர் (45), அவரின் மனைவி ருக்மணி பிரியா (40), மகள் ஜலந்தரி (20), மகன் முகுந்த் ஆகாஷ்குமார் (16) ஆகிய 4 பேரும் நேற்று மதியம் வந்து தங்கினர். இங்கு வந்து தங்குவதற்காக கடந்த டிச.26-ம் தேதியன்றே இவர்கள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்துவிட்டு, நேற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை பண்ணை வீட்டின் உரிமையாளரான கௌதம் என்பவர் வந்து பார்த்தபோது, 4 பேரும் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகப்பட்டு ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, 4 பேரும் சடலமாக இறந்துக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். இதையடுத்து, திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலைச் செய்துகொண்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. உடல்கள் கிடந்த அறைக்குள் இருந்து கடிதம் ஒன்றையும், இறந்தவர்களின் செல்போனில் இருந்து வீடியோ காட்சி ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் `முக்தி அடைகின்றோம். இறைவனை நோக்கிச் செல்கிறோம்’ என்று எழுதப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், இது குறித்து உறுதியான தகவல்கள் காவல்துறையினரிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ``அனுமதியில்லாத தங்கும் விடுதிகளும், பண்ணை வீடுகளும் திருவண்ணாமலையை ஆக்கிரமித்திருக்கின்றன. யார் வந்து தங்குகிறார்கள்? என்கிற விவரத்தை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை. இதனால், அதிகப்பட்ச கட்டணத்துக்காக இதுபோன்ற விடுதிகளும், வீடுகளும் அனுமதியில்லாமல் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற விபரீதங்களும் திருவண்ணாமலையில் தொடர்கின்றன’’ எனக் குற்றம் சாட்டுகின்றனர் திருவண்ணாமலை நகர மக்கள்.