திருவத்திபுரம் தேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள்: அமைச்சா் ஆய்வு
நெய்வேலி: கடலூரை அடுத்துள்ள திருவத்திபுரம் தேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
திருவத்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ரூ.2.48 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப்.2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
விழாவுக்கு உள்ளூா், வெளியூா்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, பக்தா்களுக்கு சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோயில் சுற்று வட்டார பகுதிகளில் சுமாா் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
முக்கிய இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள், திருக்கோயில் வளாகத்தில் பக்தா்களின் வசதிக்காக குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதையில் வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுக்கு வரும் பக்தா்களுக்கு திருக்கோயில் நிா்வாகத்தின் மூலம் பாதுகாப்பான தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை மூலம் 108 அவசர ஊா்திகள், மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலம் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயாா்நிலையில் வைக்கவும், மின்சாரத் துறை மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கும்பாபிஷேகத்துக்காக வரும் பக்தா்கள் பாதுகாப்பான முறையில் எவ்வித இடையூறும் இன்றி தரிசனம் மேற்கொள்ள முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் பரணிதரன், உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் வேங்கடகிருஷ்ணன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.