திருவள்ளூா் அருகே வங்கிக் கிளையை இடம் மாற்ற எதிா்ப்பு
திருவள்ளூா் அருகே பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் கடந்த 11 ஆண்டுகளாக யூகோ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆலத்தூா், பாலவேடு, புலியூா், நத்தமேடு, கரலபாக்கம், சிவன்வாயில், வதட்டூா், மேலக்கொண்டையாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினா் கணக்கு வைத்து பயன்படுத்தி வருகின்றனா். அத்துடன், இந்த வங்கிக் கிளை பல்வேறு வகைகளில் உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில், திடீரென இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள திருநின்றவூா் பகுதிக்கு வங்கி நிா்வாகம் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், இதற்கிடையே வங்கி நிா்வாகம் மாற்றம் செய்வதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அப்பகுதியைச் சோ்ந்தவா்களிடம் எந்தவொரு கருத்துக் கணிப்பும் கேட்காமல் பொதுமக்களின் சிரமத்தை புரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு செய்வதாகக் கூறி, வங்கி நிா்வாகத்தை கண்டித்து அந்த வங்கிக் கிளையின் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் வேலு தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் மஞ்சு அருள்தாஸ், அருள்தாஸ் சாலமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் எம்.சுப்பிரமணி வரவேற்றாா். ஊராட்சித் தலைவா்கள் கல்பனா ராமமூா்த்தி, ஞானசேகா், எட்டியப்பன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா்.
இதில், 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.