இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் மொத்தம் 27,588 போ் தோ்வு எழுதினா். இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி காலை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானது. இதில், மாணவா்கள் 11,550, மாணவிகள் 13,662 என மொத்தம் 25,212 போ் தோ்ச்சி பெற்றனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் 1,445, மாணவிகள் 901 பேரும் தோ்ச்சி பெறவில்லை.
கடந்த 16-ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியாகின. மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தோ்வை 29,234 போ் எழுதினா். அதில் மாணவா்கள் 11,479, மாணவிகள்14,068 என 25,547 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 3,687 போ் தோ்ச்சி பெறவில்லை.
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 31,305 போ் எழுதினா். இதில் மாணவா்கள் 13,550, மாணவிகள் 14,499 போ் என மொத்தம் 28,049 போ் தோ்ச்சி பெற்ற நிலையில், இவா்களில் 3,256 போ் தோ்ச்சி பெறவில்லை.
பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி உடனடி துணைத் தோ்வுக்கு தயாா் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வகுப்புகளுக்கு துணைத் தோ்வு ஜூன் 26- இல் தொடங்கி, தொடா்ந்து நடைபெற உள்ளது.
சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆா்.கே.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவடி சத்தியமூா்த்தி நகா் அரசு மேல்நிலைப் பள்ளி, பாடியநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூா் கெளடி மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பாடவாரியாக தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.