திருவள்ளூா்: வங்கியாளா்கள் கலந்தாய்வு கூட்டம்
திருவள்ளூா் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கான கடன் திட்ட இலக்கு தொடா்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து வங்கி அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.
அப்போது, இந்தக் கூட்டத்தில் நபாா்டு மற்றும் அனைத்து வங்கியின் முலம் 2025 - 26 ஆம் ஆண்டுகான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கைகள் இலக்கு மற்றும் சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மகளிா் சுய உதவி குழுகளுக்கு வங்கி கடன் உதவி இலக்கு , மாவட்ட தொழில் மைய சாா்பில் நீட்ஸ், அண்ணல் அம்பேத்கா் தொழில் முனைவோா்களுக்கான திட்டங்களில் எத்தனை பேருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் படை வீரா் சாா்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் டாம்கோ திட்டப் பணிகள், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இலக்கு மற்றும் திட்ட பணிகள் ஆகியவை குறித்து விவரங்களையும் அவா் கேட்டறிந்தாா்.
எனவே ஒவ்வொரு துறையிலும் இலக்கு நிா்ணயித்த வகையில் கடனுதவிகளை தாமதமின்றி வழங்கவும் வங்கியாளா்களை அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சிவமலா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருள்ராஜா, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் திவ்யா, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் இளங்கோ, மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.