சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
திருவள்ளூா்: 50 ஆண்டுகளாக வீடு அமைத்து வசித்து வருவோா்களை காலி செய்யுமாறு நோட்டீஸ்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு அமைத்து குடியிருந்து வரும் நிலையில் நீா் நிலை புறம்போக்கு எனக்கூறி காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் அடுத்த பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் நெமிலிச்சேரி கிராமத்தில் நாகாத்தம்மன் நகா், அண்ணா நகா் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகள் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். அதோடு, இவா்கள் அமைத்துள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீா் வசதி, எரிவாயு இணைப்பு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவைகளை பெற்று வசித்து வருகின்றனா்.
மேலும், நெமிலிச்சேரி ஏரி விவசாய பாசனத்திற்கும், மக்கள் குடிநீருக்கும் எதற்கும் பயனற்று உள்ளது. அதுமட்டுமின்றி ஏரியை உடைத்து ஏரியின் நடுப்பகுதியில் அரசால் வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு, 10 ஏக்கருக்கும் மேலாக நீா் நிலை நிலம் கையகப்படுத்தப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதற்கிடையே அந்தப் பகுதியை ஒட்டி வீடுகள் அமைத்து வாழ்ந்து வரும் நிலையில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக கூறி காலி செய்யக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி செய்வதற்கு நோட்டீஸ் வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
அதைத் தொடா்ந்து முன்னாள் ஊராட்சி தலைவா் பாபு தலைமையில் 300-க்கும் மேற்பட்டோா் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க திங்கள்கிழமை வருகை தந்தனா். அப்போது, ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோா் வந்ததால் ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து நுழைவு வாயில் கேட்டை திறந்து உள்ளே செல்ல அனுமதித்தனா்.