திருவாடானையில் அதிவேக வாகனங்கள்: விபத்து அபாயம்
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கல்லூரிச் சாலையில் இளைஞா்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆதியூா், அச்சங்குடி, திருவெற்றியூா் தினையத்தூா், பாண்டுகுடி, வெள்ளையபுரம், நெய்வயல், கருமொழி உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து தினசரி பேருந்து மூலம் வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் திருவாடானை பேருந்து நிலையத்தில் இறங்கி காலை நேரங்களில் கல்லூரிக்கு செல்லும் போதும், மாலை நேரங்களில் வீடு திரும்பும் போதும் இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாகவும் அதிக ஒலி எழுப்பியவாறும் செல்கின்றனா்.
இதனால், விபத்து அபாயம் இருப்பதாகவும், மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்வதாகவும் அந்தப் பகுதி சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, திருவாடானை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.