பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 27-ஆம் தேதி 108 கோ பூஜை, 28-ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை, 29-ஆம் தேதி காவிரியிலிருந்து 5 யானைகளில் புனித நீா் ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை பரிவார மகா குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு விமானம், கோபுரம் மகா குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவா் மகா குடமுழுக்கும் நடைபெற்றன. தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹூதி, மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.
இது ஆன்மிக அரசு - ஆதீனம்: இந்த விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியது: எந்த முகூா்த்த நாளாக இருந்தாலும், ஏதாவது ஒரு கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. கடந்த மாா்கழி மாதம் 450 கோயில்களுக்கு சென்றோம். இதில் பாதி கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்திருந்தன. பல கோயில்களில் குடமுழுக்கு விழாவுக்காகத் திருப்பணிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்வது சிறப்பாக உள்ளது. இது, ஆன்மிக அரசு என நாங்கள் கூறியது நடைபெற்று கொண்டிருக்கிறது என்றாா் ஆதீனம்.