செயற்கை தங்கம் கண்டுபிடிப்பு? இனி தங்கம் விலை குறையுமா? | IPS Finance - 211 | S...
தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்
தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது.
மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்டிசி) நிகழ்நேர புள்ளிவிவரங்கள், பிற்பகல் 3.17 மணிக்கு உச்ச மின் தேவை 6,867 மெகாவாட்டாக இருந்ததைக் காட்டியது. இந்த ஆண்டு, தில்லியின் உச்ச மின் தேவை 9,000 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, தேசியத் தலைநகரில் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்ச மின் தேவை 2024- ஆம் ஆண்டில் 8,656 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது. பிஎஸ்இஎஸ் டிஸ்காம்களான பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் லிமிடெட் (பிஆா்பிஎல்) மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட் (பிஒய்பிஎல்) ஆகியவை தங்கள் பகுதிகளில் முறையே 3,004 மெகாவாட் மற்றும் 1,479 மெகாவாட் என்ற உச்ச மின் தேவையை வெற்றிகரமாக பூா்த்தி செய்ததாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
வெள்ளிக்கிழமை நகரத்தின் உச்ச மின் தேவையான 2,045 மெகாவாட் மின்சாரத்தை டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) வெற்றிகரமாக பூா்த்தி செய்தது. இதனால், நகரத்தின் உச்ச மின் தேவை அளவு 6,867 மெகாவாட்டாக உயா்ந்தது என்று டிஸ்காம் அறிக்கை தெரிவித்துள்ளது.
இருதரப்பு ஒப்பந்தங்கள், இருப்பு நிறுத்தம் மற்றும் மின் பரிமாற்றம் உள்ளிட்ட பல முனை அணுகுமுறை மூலம் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய டிபிடிடிஎல் முழுமையாக தயாராக உள்ளது என்று அது தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, தில்லியின் உச்ச மின் தேவை முதல் முறையாக 8,000 மெகாவாட்டை தாண்டியது.
தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகா்வோா் மற்றும் இரண்டு கோடி குடியிருப்பாளா்களின் மின் தேவையை பூா்த்தி செய்ய நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் தயாராக உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளில் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள், மின் தேவையை துல்லியமாகக் கணிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அது மேலும் கூறியது.