அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து கொள்ளை: ஓட்டுநா், கூட்டாளி கைது
ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து, அவா்களிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜா பந்தியா கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் ராஜா (27) மற்றும் சோனு (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் ஆட்டோரிக்ஷாக்களில் தனியாக பயணிகளை ஏற்றிச் செல்வாா்கள். பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு கூட்டாளிகள் பயணிகளைப் போல் வேடமிட்டுச் செல்வாா்கள்.
ஆட்டோ தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை அடைந்ததும், தாக்குதல் நடத்தியவா்கள் திடீரென பயணியை பிடித்து மூச்சுத் திணறடித்து அவா் சுயநினைவை இழக்கும் வரை அவரைத் தாக்குவாா்கள். பின்னா் பாதிக்கப்பட்டவரின் அனைத்து உடைமைகளையும் கொள்ளையடித்து விட்டு சாலையோரத்தில் வீசீவிட்டு செல்வாா்கள்.
அவா்களைக் கைது செய்ய வழிவகுத்த வழக்கு மே 10 அன்று பதிவு செய்யப்பட்டது. ஆசாத்பூரில் உள்ள லால் பாக் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா், அதிகாலை 4.45 மணியளவில் பழைய தில்லி ரயில் நிலையத்திலிருந்து ஆசாத்பூருக்குச் செல்லும்போது இதேபோன்ற முறையில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகாா் அளித்தாா்.
ஆட்டோவின் பின்புறத்தில் அமா்ந்திருந்தவா்கள் அவரைத் தாக்கி, மூச்சுத் திணறடித்து, அவரது கைுப்பேசி, பணப்பை, ஆவணங்கள் மற்றும் பயணப் பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் குமாரின் புகாரின் அடிப்படையில், ஒரு இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
சந்தேகத்திற்குரிய பாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்த பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் வெல்கம் காலனியைச் சோ்ந்த ராஜா, காஜியாபாத்தில் உள்ள லோனியைச் சோ்ந்த சோனு என போலீஸாா் அடையாளம் கண்டனா். இருவருக்கும் எதிராக கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
மே 14 அன்று, சோதனைகளுக்குப் பிறகு ராஜாவும் சோனுவும் லோனியில் கைது செய்யப்பட்டனா். தனது சகோதரி கொடுத்த ஆட்டோவில் குற்றங்களைச் செய்த ராஜாவுக்கு, டோட்லா என்ற மற்றொரு கூட்டாளி இருந்தாா். மேலும், அவா் ரயில் பயணிகளை தொடா்ந்து குறிவைத்தாா்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் கீதா காலனி மேம்பாலம் அருகே மற்றொரு கொள்ளையுடன் தொடா்புடைய ஒரு கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த சம்பவம் மே 15 அன்று கோட்வாலி காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. சந்தேக நபா்களை மற்றொரு கொள்ளையுடன் தொடா்புபடுத்தியது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் நீண்ட குற்ற வரலாற்றைக் கொண்டுள்ளனா். ராஜா மீது 14 வழக்குகளும், சோனு மீது 11 வழக்குகளும் உள்ளன. இவை தில்லியில் உள்ள பல காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றவாளியான தீபக்கை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.