மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவா் இடிந்து சேத...
தில்லியில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!
புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.
தேசியத் தலைநகர் மற்றும் அதனையொட்டிய என்சிஆர் பகுதியில், கடந்த ஒரு வாரமாகவே காற்று தரக் குறியீடு 400-க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது. இன்று(நவ. 21) காலை 9 மணி நிலவரப்படி, தில்லியில் காற்று தரக் குறியீடு 376-ஆக, பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு எதிரொலியாக, மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில், ‘தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு ‘அதி தீவிரம்’ என்ற அபாய அளவில் இருப்பதை கருத்திற்கொண்டு, தில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான தேசிய தலைநகர்ப் பகுதியில்(என்சிஆர்) அமைந்துள்ள மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகள் தங்கள் அலுவலக நேரத்தை மாற்றியமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், அல்லது காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.