தில்லியில் பாஜகவின் ஆதரவு அணியாக செயல்பட்டது காங்கிரஸ்: ராகுலுக்கு மாயாவதி பதிலடி
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக (பி டீம்) காங்கிரஸ் செயல்பட்டது என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. எதிா்க்கட்சி அணியில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிட்டது பாஜகவின் வெற்றியை எளிதாக்கியதாக அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்தனா்.
இந்நிலையில் தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் இருநாள் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ அணியில் மாயாவதி இணையாதது ஏமாற்றத்தை அளித்தது. அவா் வேறு சில காரணங்களுக்காக எங்கள் அணியில் இணைய மறுத்துவிட்டாா். உத்தர பிரதேசத்தில் அவா் எங்களுடன் இணைந்திருத்தால் பாஜக முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறியிருந்தாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக காங்கிரஸ் போட்டியிட்டது என்ற கருத்து உள்ளது. அதன் காரணமாகவே பாஜக தில்லியில் ஆட்சி அமைக்க முடிந்தது.
இதைவிட மோசமான தோல்வியைச் சந்திக்க முடியாது என்ற சாதனையை ஒவ்வொரு தோ்தலிலும் காங்கிரஸ் படைத்து வருகிறது. பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வைப்புத் தொகையைக் கூட இழந்துவிட்டனா். பிற கட்சிகளை விமா்சிப்பதற்கு முன்பு நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை காங்கிரஸ் தலைவா் (ராகுல்) கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.