ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தில்லியில் வேலையின்மையை 5 ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாக கேஜரிவால் உறுதி
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேசியத் தலைநகரில் வேலையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்தாா்.
முன்னாள் தில்லி முதல்வரான கேஜரிவால் வியாழக்கிழமை ஒரு விடியோ செய்தியில், வேலைவாய்ப்பு மீதான தனது கவனத்தை வலியுறுத்தினாா். ‘எங்கள் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். வேலையின்மை பிரச்னையைத் தீா்க்க எங்கள் குழு ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கி வருகிறது’ என்று கூறினாா்.
தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டுக் கூறிய கேஜரிவால், பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு இரண்டு ஆண்டுகளுக்குள் 48,000 அரசு வேலைகளை வழங்கியதாகவும், இளைஞா்களுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தனியாா் துறை வேலைகளை எளிதாக்கியதாகவும் கூறினாா்.
‘வேலைவாய்ப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் நோக்கங்கள் நோ்மையானவை. மக்களின் ஆதரவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் இருந்து வேலையின்மையை ஒழிப்போம்’ என்று அவா் தெரிவித்தாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக நகரத்தில் ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அது பாஜகவிடமிருந்து கடுமையான போட்டியை எதிா்கொள்கிறது.