தில்லி சுகாதாரத் துறையில் ஆம் ஆத்மி அரசு ரூ.382 கோடி ஊழல் செய்துள்ளது: காங்கிரஸ்
புது டெல்லி: சுகாதாரத் துறையில் ஆம் ஆத்மி அரசு ரூ.382 கோடி ஊழல் செய்ததாக காங்கிரஸ் தலைவா் அஜய் மாக்கன் புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.
தில்லியில் செய்தியாளா் சந்திப்பின் போது அவா் கூறியதாவது: சிஏஜி அறிக்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது, 14 சிஏஜி அறிக்கைகள் ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளைக் காட்டுகின்றன.
மேலும், முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது ரூ.382 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தங்கள் பணிகளை முன்கூட்டியே முடித்துவிடுவதாகவும், பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று புதிய மருத்துவமனைகள் மட்டுமே கட்டப்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.
மூன்று மருத்துவமனைகளும் காங்கிரஸ் அரசின் காலத்தில் தொடங்கப்பட்டவை. இந்திரா காந்தி மருத்துவமனை ஐந்து ஆண்டுகள் தாமதமானது. புராரி மருத்துவமனை ஆறு ஆண்டுகள் மற்றும் மௌலானா ஆசாத் பல் மருத்துவமனை மூன்று ஆண்டுகள் தாமதமானது.
இது தவிர, இந்திரா காந்தி மருத்துவமனைக்கு டெண்டா் தொகையை விட மொத்தம் ரூ.314 கோடி கூடுதலாக செலவிடப்பட்டது. புராரி மருத்துவமனைக்கு ரூ.41 கோடி கூடுதலாகவும், மௌலானா ஆசாத் பல் மருத்துவமனைக்கு ரூ.26 கோடி கூடுதலாகவும் செலவிடப்பட்டது. டெண்டா் விடப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.382.52 கோடி கூடுதலாக செலவிடப்பட்டது. நான் இதைச் சொல்லவில்லை, சிஏஜி அறிக்கை இதைச் சொல்கிறது.
சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்யாமல் நிறுத்துவதற்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்று கேஜரிவால் மற்றும் அவரது அரசாசை நான் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறேன். சிஏஜியின் கூற்றுப்படி, 2007 மற்றும் 2015-க்கு இடையில் தில்லி அரசு மொத்தம் 15 நிலங்களை கையகப்படுத்தியது. மேலும், அந்த இடங்களில் எதிலும் பணிகள் தொடங்கப்படவில்லை. 2016-17 முதல் 2021-22 வரை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பணத்தில் ரூ.2,623 கோடி காலாவதியாகிவிட்டது என்றாா் மாக்கன்.
தில்லி தோ்தல் பிப்.5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அஜய் மாக்கனின் இந்தக் குற்றச்சாட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.