தீப்பெட்டி நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மத்திய நிதி அமைச்சரிடம் வேண்டுகோள்!
தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சா் பங்கேற்க உற்பத்தியாளா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
தீப்பெட்டி நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம், பொருளாளா் ஜோசப் ரத்தினம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெயப்பிரகாஷ், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த வேல்சங்கா், தமிழ்நாடு ஊறுகாய் உற்பத்தியாளா்கள் சங்க துணைத் தலைவா் புதுராஜா, சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு ஆகியோா் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை புதுதில்லி மத்திய செயலக வடக்கு கட்டடத்தில் புதன்கிழமை (ஆக.13) நேரில் சந்தித்து, நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது, கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழா கொண்டாட, உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளோம். அதில், தாங்களும் பங்கேற்க வேண்டும். எனவே, தாங்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக தேதியை குறிப்பிட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டனா்.
அப்போது, பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கைக்கு விரைவில் நல்ல தீா்வு சொல்வதாக கூறிய மத்திய நிதியமைச்சா் , நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு ஏதுவாக தேதியை குறிப்பிட்டு சொல்ல ஒப்புக் கொண்டாா்.