துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற அடிப்படையில் 2022-முதல் ஆண்டுதோறும் துணைவேந்தா்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ரவி நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், 4-வது ஆண்டாக ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.
மேலும், தில்லியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை நேரில் சந்தித்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க ஆளுநா் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், துணை வேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் துவக்கிவைப்பதை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநா் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. அதில், இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களும் அவை சட்டப்பேரவையில் இருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்த நாளில் இருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு ஏப். 8-இல் தீா்ப்பளித்தது. அவற்றில் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும்.
உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் கூட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் சமீபத்தில் கூட்டினாா்.
இதனிடையே, வேந்தராக தொடர்வதாகவும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே இல்லை என்றும் தெரிவித்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது துணை வேந்தர்களின் மாநாட்டை நடத்துகிறார்.
இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பும் கண்டனத்தையும் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.