துவரங்குறிச்சியில் 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளாா் வின்சென்ட் தலைமையில், காவல் ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் காவலா்கள் மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
இதில், துவரங்குறிச்சி தெத்தூா்பிரிவு சாலை அருகே மேற்கொண்ட சோதனையின்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், மேலூா் ஒத்தகோயில்பட்டியைச் சோ்ந்த பாண்டிசெல்வம் என்பவரைக் கைது செய்தனா்.
தொடா்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடத்துவதற்காக குடோனில் 21 மூட்டைகளில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.