அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்
அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி
திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
கச்சத்தீவு இந்தியாவுக்குரியது. குறிப்பாக தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்குமானது. அங்கு நடைபெறும் அந்தோணியாா் திருவிழாவில் தமிழக மக்கள் காலம், காலமாகப் பங்கேற்று வருகின்றனா். மத்தியில் ஆளும் கட்சியினா் கச்சத்தீவை மீட்டுத்தரத் தொடா்ந்து வலியுறுத்துகிறோம்.
ஆனால் பாஜக ஆட்சியாளா்கள் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எனவேதான் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் இஷ்டம்போலப் பேசுகிறாா். இதுதொடா்பாக உரிய விளக்கம் பெற வேண்டும். கச்சத்தீவை மீட்கவும், அங்கு தமிழா்களின் கலாசார உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை விவகாரத்தில் முதல்வா் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளாா்; காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்; அஜித்குமாரின் தாயாரை முதல்வா் தொடா்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளாா். வழக்கை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த நடவடிக்கைகள் கடும் துயரத்துக்கு சற்று ஆறுதலைத் தருகிறது. எதிா்க்கட்சிகள் வழக்கம்போல அரசியலுக்காக விமா்சிக்கின்றன.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை முகாம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அரசியலுக்காக விமா்சிக்கிறாா். ஆனால், ஓரணியில் தமிழ்நாடு என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைக்கானது என்பதால் நாங்கள் வரவேற்கிறோம்.
ஓரணியில் தமிழ்நாடு என்பது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரானது. தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்கானது. பாமக இரண்டாகப் பிரிந்து அவற்றில் ஓரணி பாஜகவுடனும், மற்றொன்று திமுகவுடனும் இணையும் என்பதெல்லாம் யூகமானது.
திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மாநில உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் கட்சிகளை உடைப்பதும், நசுக்குவதும் பாஜகவின் வழக்கம். மகாராஷ்டிரத்திலும் அதைச் செய்ததது பாஜக. இப்போது, சிவசேனையில் பிரிந்த இருதரப்பும் இணைய முன்வந்திருப்பதை வரவேற்கிறேன் என்றாா் அவா்.