தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
கேரளத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் நாள்தோறும் கூவிய சேவல் மீது முதியவர் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணா குரூப்.
இவருக்கும் இவரின் அண்டை வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது நிலத்தராறோ பணத்தகராறோ அல்ல; சேவலால் வந்த தகாராறு.
ராதாகிருஷ்ணாவின் அண்டை வீட்டாரான அனில் குமார், சேவல் வளர்த்து வருகிறார். இந்த சேவல் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு கூவுவதால், தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார் ராதாகிருஷ்ணா.
வயது மூப்பு காரணமான நோயால் அவதிப்பட்டுவரும் ராதாகிருஷ்ணா, இரவில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, அதிகாலையில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது சேவல் நாள்தோறும் அதிகாலையில் கூவுவதால் தூங்க முடியவில்லை என வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ராதாகிருஷ்ணா, அனில் குமார் ஆகிய இருவரையும் வைத்து விசாரணை நடத்தி தீர்வு காண முயன்றனர்.
இதில், அனில் குமார் வளர்த்துவரும் சேவல் வீட்டின் மாடியில் வைக்கப்பட்டுள்ளது. அதனால், சேவல் கூவுவது மற்றவர்களுக்கு இரைச்சலாக உள்ளது.
அதனால், முதியவரை பாதிக்காத வகையில், மாடியின் தெற்குப் பகுதியில் சேவலுக்கு தனிக் கூடாரம் அமைக்க வேண்டும் என அனில் குமாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்காக 14 நாள்களை கெடு விதித்தனர்.
இதையும் படிக்க | மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகம், கேரளத்துக்கு பூஜ்யம்!