Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
தூத்துக்குடியில் தாழ்வான இடங்களை சூழ்ந்த மழை நீா்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மாநகரின் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தொடா்ந்து பரவலாக பெய்து வருகிறது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் குளம் போல் சூழ்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எஸ்.எஸ்.தெரு, தபால் தந்தி காலனி, பாளையங்கோட்டை சாலை, ராஜீவ் நகா், கதிா்வேல் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி அருகே உள்ள செங்குளம் நிரம்பி அங்கிருந்து வரும் உபரிநீா் அய்யனடைப்பு, சோரீஸ்புரம், மாதவன் நகா் இந்திரா நகா் வழியாக உப்பாத்து ஓடைக்கு செல்கிறது.
நீா்வரத்து அதிகமாக இருப்பதால், இந்த நீா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் 3 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஊழியா்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவசர பணியில் ஈடுபடும் ஊழியா்கள் தவிர பெண் ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் அலுவலகத்தில் இருந்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேலும், சோரீஸ்புரம் குடியிருப்பு பகுதிகள், மாவட்ட வேலைவாய்ப்பு வளாகம் முழுவதும் மழை நீா் சூழ்ந்தது.
சூசைபாண்டியாபுரம் பகுதியில் குடியிருப்பு முழுவதும் சூழ்ந்ததால், பொதுமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயா்ந்தனா். தூத்துக்குடி - பாளையங்கோட்டை நான்குவழிச் சாலையிலும் சூழ்ந்ததால், வாகனங்கள் ஒருவழியில் இயக்கப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழை வெள்ள நீா் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. மனநல பிரிவு பகுதியில் மழைநீா் உள்ளே புகுந்ததால் நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனா். இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக, 101 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியாகவும் என மொத்தம் 105 வீடுகள் சேதமடைந்துள்ளன என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.