இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
தூத்துக்குடி : வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் - தங்கநகைக்காக கொலை செய்த பெண்
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் திருப்பனை சி.எஸ்.ஐ கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். அவரின் மனைவி வசந்தா. அங்கன்வாடி ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சபிதா என்ற மகளும், வினோத், விக்ராந்த் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
சபிதா, வினோத் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். விக்ராந்த், சாத்தான்குளம் டிஎ.ஸ்.பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கமாக காலை, மாலை வேளைகளில் அக்கம்பக்கத்தினருடன் வசந்தா அமர்ந்து பேசுவது வழக்கம்.

ஆனால், நேற்று (14-ம் தேதி) மாலை அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் பூட்டப்பட்டு கிடந்தது. இதனையடுத்து விக்ராந்திற்கு தகவல் கூறியுள்ளனர். தனது தாயாரின் செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பினை அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில், தனது உறவுக்காரர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி பார்க்கச் சொன்னபோது தலையணையால் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின், கம்மல்கள் என 9 சவரன் தங்க நகைகள் பறித்துச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு நெல்லை டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவிட்ட நிலையில் தீவிரமாக போலீஸார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் பேய்குளம் அருகே உள்ள மீரான் குளத்தைச் சேர்ந்த செல்வ ரதி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. அவர் வீட்டு அருகிலேயே ஒரு சில சம்பவங்களை நடத்தியுள்ளார்.

ஆனாலும் புகார் செய்யப்படவில்லை. இந்நிலையில் தேரிப்பனையில் உள்ள விக்ராந்தின் தாய் வசந்தா வீட்டிற்கு செல்வரதி சென்றுள்ளார். வசந்தாவிடம் பேச்சுக்கொடுத்த அவர், வசந்தாவின் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். 9 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு நேராக மீரான் குளம் வந்துள்ளார். அங்கு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்பு ஓய்வு பெற்ற மூதாட்டியை தள்ளி கொலை செய்தது, அல்வா கடைக்காரர் மகளிடம் நகையைத் திருடியது போன்ற சம்பவங்கள் இப்போது வெளிவந்துள்ளன. அது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.