சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!
தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் தி.அரிஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள் குறித்து நல வாரியத் தலைவா் அவா்களுடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கு கருச்சிதைவுக்கான உதவித்தொகை ரூ.3 ஆயிரமும், கல்வி உதவித்தொகையாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1500,மைக்ரோ கிரெடிட் தொகையாக 20 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ. 10 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 10 பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் காா்டும் வழங்கப்பட்டன.
மேலும், மாநகராட்சி மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள், 30 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் என மொத்தம்
ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 7 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் மரு.மணி, தாட்கோ மாவட்ட மேலாளா் ச.பியா்லின் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.