தூய்மைப் பணியாளா்கள் அவமதிப்பு: அரசுப் பேருந்து நடத்துநா் பணி நீக்கம்
அரசுப் பேருந்தில் தூய்மைப் பணியாளா்கள் அவமதிக்கப்பட்டது தொடா்பாக பேருந்தின் நடத்துநா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கணக்கம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் நடத்துநா் முரளி ஜூன் 26-ஆம் தேதி பணியில் இருந்துள்ளாா்.
அப்போது, அவா் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தும், தவறான டிக்கெட் வழங்கியும், தூய்மைப் பணியாளா்களை நடுவழியில் இறக்கிவிட்டு அவமதிப்பு செய்ததாகவும் புகாா் எழுந்தது.
இந்நிலையில், நடத்துநா் முரளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, முரளியை பணி நீக்கம் செய்து திருப்பூா் மண்டல போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.