பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர...
தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
திருச்சியில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சி, திருவெறும்பூா் முத்து நகா் காா்மல் காா்டன் பகுதியில் புதை சாக்கடையில் திங்கள்கிழமை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களான புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரைச் சோ்ந்த ரவி (38), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சோ்ந்த பிரபு (32) ஆகிய இருவரும் புதை சாக்கடை குழியில் இறங்கி அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது, விஷவாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின்போது, மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனிருந்தவா்கள் திருவெறும்பூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் புதை சாக்கடை குழியில் இருந்து இருவரது சடலத்தையும் மீட்டனா். இதைத் தொடா்ந்து சடலங்களை திருவெறும்பூா் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.