பாலியல் தொல்லை! ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை: 5 போ் கைது
பொறியியல் கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக 5 பேரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வில்லிபுத்தூா் மம்ஷாபுரத்தைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் மாரீஸ்வரன் (21). இவா் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படித்து வந்தாா். சனிக்கிழமை இரவு மண்டையூா் பகுதியில் பல்லவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரீஸ்வரன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனா்.
விசாரணையில், முகநூல் வழியே அறிமுகமான திருவெறும்பூா் மேலஅம்பிகாபுரம் செ. இளங்கோவனை (20) சந்திக்க மாரீஸ்வரன் அடிக்கடி அரியமங்கலத்துக்கு சென்று வருவாராம். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, இளங்கோவன் உள்ளிட்டோா் மாரீஸ்வரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது, அதனை நண்பா்கள் ஆபாச விடியோ எடுத்ததுடன், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டு தாக்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவமானமடைந்த மாரீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இது மாரீஸ்வரன் எழுதியிருந்த கடிதம் மூலம் தெரியவந்ததைத் தொடா்ந்து, மாரீஸ்வரனுக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டியதாக திருவெறும்பூா் மேலஅம்பிகாபுரம் செ. இளங்கோவன் (20), பாரதியாா் தெருவைச் சோ்ந்த ப. பவித்ரன் (21), க. முத்துராஜா (21), அரியமங்கலம் திடீா் நகரைச் சோ்ந்த ர. பாண்டீஸ்வரன் (18), மேலகல்கண்டாா்கோட்டை அ. ஆண்டனி சஞ்சய் (22) ஆகிய 5 பேரையும் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].