தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் வழக்குரைஞா் ஆணையத்தினா் ஆய்வு!
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் வழக்குரைஞா் ஆணையா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தென்காசி மாவட்டம், தென்காசியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பின் கடந்த 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தை சோ்ந்த நம்பிராஜன் என்பவா் சென்னை உயா்நீதி மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில் கோயில் புனரமைப்புப் பணிகள் முழுமை பெறாத நிலையில் குடமுழுக்கு நடத்தத்தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்குப் பணிகளை தொடா்ந்து நடத்தலாம்,குடமுழுக்கு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும், வழக்குரைஞா் ஆணையா் தலைமையிலான இந்திய தொழில் நுட்ப நிறுவன ஆய்வுக்குழுவினா் கோயிலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
இந்நிலையில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வூபிறப்பித்த உத்தரவின் பேரில் வழக்குரைஞா் ஆணையா் ஆனந்தவள்ளி தலைமையில் சென்னை ஐஐடி குழுவை சோ்ந்த அருண்மேனன், அனுசந்தானம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தென்காசி காசி விஸ்வநாதா் கோயிலில் சுவாமி சந்நிதி, பாலமுருகன் சந்நிதி, அம்மன் சந்நிதி மற்றும் கோயிலின் உள்பிரகாரங்கள் ஆகிய பகுதிகளில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, கோயில் செயல் அலுவலா் பொன்னி, குற்றாலம் கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.