தென்னாப்பிரிக்க வீரரின் பேட்டிங்கில் மயங்கிய அஸ்வின்..!
தென்னாப்பிரிக்க வீரர் ரயான் ரிக்கெல்டனை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் தமிழக வீரர் ஆர் அஸ்வின்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 43.3 ஓவா்களில் 208 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளும் இழந்தது.
தென்னாப்பிரிக்க தரப்பில் பேட்டா்கள், பௌலா்கள் என இரு தரப்புமே அசத்த, ஆல்-ரவுண்ட் ஆட்டத்துடன் வென்றது அந்த அணி.
தென்னாப்பிரிக்கா சார்பில் சதமடித்த ரயான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருது வென்றார். பலரும் இவரது பேட்டிங்கை பாராட்டி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவரை ரிக்கெல்டன் சிறப்பாக விளையாடினார்.
இது குறித்து தமிழக வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
ரயான் ரிக்கெல்டன் நல்ல வீரர். ஆனால், அவர் ரஷித் கானை எதிர்கொள்ளும் விதம் மிகவும் மயக்குவதாக இருக்கிறது என்றார்.
10 டெஸ்ட்டில் 616 ரன்கள், 6 ஒருநாள் போட்டிகளில் 291 ரன்கள் என இரண்டு ஃபார்மட்டிலும் 41 சராசரியை ரயான் ரிக்கெல்டன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.