ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
தென்மேற்கு பருவமழையால் மேகமலை அணைகளில் நீா் மட்டம் உயா்வு
தேனி மாவட்டம், மேகமலையில் தென்மேற்கு பருவமழையால் அணைகளில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது.
சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், நீா் நிலைகள், அணைகளைப் பாா்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால், மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய 5 அணைகளில் 70 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. இதைத் தொடா்ந்து மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணி ஒருவா் கூறுகையில், ‘மேகமலையில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. மலைகளைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களைக் காண்பது சிறந்த அனுபவம்’ என்றாா்.
மின்சார உற்பத்தி: நீா்வரத்து அதிகரிப்பால் இரவங்கலாறு அணையிலிருந்து கீழ் நோக்கி செல்லும் ராட்ச குழாய் மூலமாக சுருளி நீா் மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரிலிருந்து 35 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.