மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி டி. ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (25). கூலித் தொழிலாளியான இவா், ஆண்டிபட்டி பாப்பாம்மாள்புரத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். இதையடுத்து, அன்றிரவு அங்கு மாடியில் தூங்கினாராம்.
அப்போது, தூக்கத்தில் மாடியிலிருந்து ஆறுமுகம் தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.