IND vs PAK: "இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்தை விட முக்கியமா?" - BCCI-ஐ மீது மகா....
தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை
நாமக்கல் மாநகரப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் து.கலாநிதி தலைமை வகித்தாா். துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 11-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் பேசுகையில், தெருநாய்கள் கடிப்பதால் அரசு மருத்துவமனையில் பலா் சிகிச்சைக்குள்ளாகும் நிலை உள்ளது. தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றைப் பிடித்து கருத்தடை நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா். 9-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நந்தகுமாா் பேசுகையில், மாநகராட்சி அலுவலகம் எதிரில் வேகத்தடை அமைக்கக் கோரி பலமுறை கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிவேகத்தில் வரும் வாகனங்களால், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வருவோா் விபத்தில் சிக்குகின்றனா். வேகத்தடை அமைக்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
29-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரோஜாரமணி பேசுகையில், எனது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் புதைச்சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். 6 மாதங்களுக்கு முன் மனு அளித்த நிலையிலும் இதுவரை நடவடிக்கை இல்லை. அந்த பகுதியை சீரமைக்க வேண்டும்.
மேலும், வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலா்கள் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்து அதன்பிறகு பணிகளை தொடங்கவேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து, சாதாரணக் கூட்டம், அவசரக் கூட்டம் தொடா்புடைய அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயா் து.கலாநிதி தெரிவித்தாா்.