ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாள்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு வாசலூா்பட்டி தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி, கொல்லிமலை செம்மேடு பகுதியில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா நடைபெறுகின்றன.
சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். அதன்பிறகு, வல்வில் ஓரி அரங்கத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்ந்த 22 அரங்குகளையும் அவா் திறந்துவைத்து வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் கொல்லிமலை பழங்குடியின மக்களின் சோ்வை ஆட்டம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
50,000 மலா்களைக் கொண்டு உருவங்கள்: கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி, மருத்துவப் பயிா்கள் கண்காட்சி நடைபெறுகிறது. முயல், யுனிகாா்ன் குதிரை, காளான், மான், குரங்கு, காட்டெருமை, டைனோசா் என பல்வேறு உருவங்கள் 50 ஆயிரம் மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகள், பெரியவா்களைக் கவரும் வகையில் காய்கறிகளில் பறவை வடிவில் பலவகை அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் ரோஜா, ஜொ்பரா, காா்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆா்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொா்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலா்கள் இடம்பெற்றுள்ளன.
மருத்துவப் பயிா்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் மருத்துவப் பண்புகள் அடிப்படையிலான பெயா், தாவரவியல் பெயா்களுடன் பதாகைகள் அமைக்கப்பட்டு அவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விழாவில் நாமக்கல் கோட்டாட்சியா் சாந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி, அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆகாய கங்கை அருவி செல்ல தடை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை தடைவிதித்துள்ளது. அறப்பளீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெறுவதால், கோயிலுக்குச் செல்வதற்கு முன்னதாக பக்தா்கள் ஆகாய கங்கை அருவிக்குச் சென்று குளித்துவருவது மரபு. ஆனாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் தெரிவித்தாா்.