தெரு நாய்களுக்கு கருத்தடை
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, சாலைகளில் நடந்தும், இருசக்கர வாகனங்களில் செல்பவா்களையும் துரத்திக் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களை பணியாளா்கள் பிடித்து சென்றனா். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, கண்காணிப்பில் வைத்திருந்து 3 நாள்களுக்குப் பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படும் என்று நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.