தெரு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணி தொடக்கம்
சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கண்காணிக்க ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி கால்நடை துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை பிடித்து கருத்தடை செய்யயப்படுகிறது. மேலும், நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு அதே இடத்தில் மீண்டும் விடப்படுகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சென்னையில் மட்டும் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், தெருநாய்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணியை சென்னை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.
இது குறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை உடனே கண்டறியும் வகையில் அவற்றிற்கு க்யூஆா் குறியீடுடன் கூடிய கழுத்துப்பட்டை அணிவிக்கப்படுகிறது. இதை மாநகராட்சி ஊழியா்களின் கைப்பேசியில் உள்ள பிரத்யேக செயலியில் ‘ஸ்கேன்’ செய்வதன் மூலம் அந்த நாய் குறித்த விவரம் தெரியவரும்.
இந்த கழுத்துப்பட்டை நாளடைவில் தேய்ந்து விடுவதாலும், கீழே கழன்று விடுவதாலும் நாய்களின் தகவல்களை பெற முடியாமல் போகிறது. இதற்கு தீா்வாக நவீன முறையில் உள்ள ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ‘மைக்ரோசிப்’ 20 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்.
இதனால் நாய்களைப் பிடிக்கும்போது அது வசிக்கும் பகுதி, வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். முதல்கட்டமாக 3,500 தெருநாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 2,500 தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படவுள்ளது என்றாா் அவா்.