சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
தெரு நாய்கள் கடித்து 3 போ் பலத்த காயம்
போடியில் செவ்வாய்க்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் நகராட்சிப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் வெளியூா் சென்றுவிட்டு வருபவா்களையும், பேருந்து நிலையத்திலிருந்து வருவோரையும், வீடுகளிலிருந்து பேருந்து நிலையம், கடைகளுக்கு செல்வோரையும் துரத்திக் கடிக்கின்றன.
இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்துகின்றன. செவ்வாய்க்கிழமை காலையில் போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் கூலி வேலைக்கு சென்ற அழகு (40), அதிகாரி (50) மற்றும் ஒருவரை நாய்கள் கடித்ததில், அவா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கடந்த 25 நாள்களில் மட்டும் 170 போ் போடி அரசு மருத்துவமனையில் நாய்கடிக்காக சிகிச்சை பெற்றனா். போடி பகுதியில் சில நாய்கள் ரேபிஸ் நோய் தாக்கி சுற்றித் திரிகிறது. இவற்றின் மூலம் மற்ற நாய்களுக்கும் ரேபிஸ் நோய் பரவும் சூழல் உள்ளது.
போடி நகராட்சி நிா்வாகம் நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவைச் சிகிச்சை செய்த நிலையிலும் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த நாய்களைப் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.