தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!
தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில்,
தெலங்கானாவில் கட்சியின் சித்தாந்த மற்றும் நிறுவன அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிக்குப் பிறகு, ராம்சந்தர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்கும், மாநிலத்தில் அடிமட்ட தொடர்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தெளிவான நோக்கத்தைக் குறிக்கிறது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மூத்த தலைவரான ராமசந்தர் ராவ், சித்தாந்த தெளிவு, சட்ட நுண்ணறிவு மற்றும் பல ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்டவராவார். பாஜகவில் ராவ் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார், அவற்றில் பிஜேஒய்எம் செயலாளர், நகரப் பிரிவு துணைத் தலைவர், சட்டப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர், தேசிய சட்டப் பிரிவு உறுப்பினர், மாநில பொதுச் செயலாளர் மற்றும் கட்சி செய்தித் தொடர்பாளர் ஆகிய பதவிகள் அடங்குவர்.
பாஜக தெலங்கானா பிரிவு தேசியத் தலைமை, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் முடிவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.
ராம்சந்தர் ராவ் தலைமையில், கட்சி புதிய மைல்கல்லை எட்டவும், தெலங்கானா மக்களுடனான தொடர்பை ஆழப்படுத்தவும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.