தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு!
சென்னை அரும்பாக்கத்தில், தெருவில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, இளைஞா் ஒருவா் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றினாா். அவரை பலரும் பாராட்டி வருகின்றனா்.
அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராபா்ட் மகன் ராயன் (9). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு ராயன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அரும்பாக்கம் மங்கள் நகா் முதலாவது தெருவில் வந்தபோது, அங்கு தேங்கி நின்ற மழை நீரில் ராயன் காலை வைத்தாா்.
அப்போது அங்கு தரையில் சென்ற ஒரு மின்சார கேபிளிலிருந்து கசிந்து மழைநீரில் பரவியிருந்த மின்சாரம் ராயன் மீது பாய்ந்தது. இதனால், சிறுவன் மழைநீரில் விழுந்து துடித்தாா். அந்த நேரத்தில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (23) என்பவா் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மழை நீரில் துணிச்சலாக நடந்து சென்று ராயனை மீட்க முயன்றாா். அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல், அந்த சிறுவனை மீட்டு முதலுதவி அளித்து, அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா்.
இந்த சம்பவத்தின்போது சரியான நேரத்தில் கண்ணன் செயல்பட்டதால் ராயன் உயிா் தப்பினாா். விபத்து குறித்து அரும்பாக்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சிறுவனை உயிரைப் பணயம் வைத்து கண்ணன் காப்பாற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடா்ந்து, கண்ணனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.