அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
தேசிய உயிரியல் பூங்காவில் சிங்கக் குட்டி உயிரிழப்பு
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆசிய சிங்கக் குட்டிகளில் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்தது. மற்றொரு சிங்கக் குட்டியின் உடல்நிலை நலிவடைந்த நிலையில், அது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘சிங்கக் குட்டிகளில் ஒன்றின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அது திங்கள்கிழமை உயிரிழந்தது. அன்றைய தினம் மாலையில், மற்றொரு சிங்கக் குட்டியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பூங்காவில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டது. தற்போது, அதற்கென தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்பட்டு வருகிறது. இது சிகிச்சைக்கு நன்றாக பலனளித்து வருகிறது என்றனா்.
தாய் சிங்கமான மகாகெளரி மற்றும் பிற இரு குட்டிகளின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பூங்காவின் இயக்குநா் சஞ்ஜீத் குமாா் தெரிவித்தாா்.
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள மகாகெளரி சிங்கத்துக்கு 4 சிங்கக் குட்டிகள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தன.
ஆசிய பெண் சிங்கமான மகாகெளரி அதன் தந்தை சிங்கமான மகேஷ்வருடன் கடந்த 2021-இல் குஜராத்தின் ஜுனாகத்திலிருந்து தில்லிக்கு கொண்டுவரப்பட்டது.
சா்வதேச அளவில் ஆசிய சிங்கங்களில் புகலிடமாக குஜாரத் உள்ளது. கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, அந்த மாநிலத்தில் 674 ஆசிய சிங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கிா் வனஉயிரிகள் சரணாலயத்தில் உள்ளன. ஐயுசிஎன் வகைப்பாட்டின்படி இந்த வகை சிங்கங்கள் ஆபத்தில் உள்ளன உயிரினங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.