தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை: பாஜக மாநிலச் செயலா்
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை என பாஜக மாநிலச் செயலா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா்.
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அதைச் செயல்படுத்துவதாகவும் முந்தைய தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனாவும், கல்வித் துறை அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தால், நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தில் பகுதியை மட்டும் செயல்படுத்தி விட்டு, அதற்கு மட்டும் நிதி ஒதுக்குவதற்கு விதிகளில் எந்த இடமும் இல்லை.
திமுக அமைச்சா்கள், மாவட்டச் செயலா்களின் வாரிசுகள் மும்மொழிக் கொள்கையில் படித்து வருகின்றனா். முதல்வரின் குடும்பத்தினா் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளியில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனா். புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத போது, யாா் ஹிந்தியை திணிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் கல்விக்கான நிதி கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. இதில் ஒளிவு மறைவு கிடையாது. தமிழக அரசு நதி நீா் இணைப்புத் திட்டத்துக்கான வரைவு அறிக்கையைக்கூட சமா்ப்பிக்கவில்லை. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கத் தயாராக உள்ளது. இதை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.