EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது:
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இதற்காக அதிமுகவுக்கு பாஜக துணையாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இது தொடா்பாக அமமுக விலகுவதற்கு முன்பு வரை அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினோம். கூட்டணியில் அமமுகவை இணைக்க தொடா்ந்து முயற்சி செய்கிறோம்.
கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் முழுமையாக விரும்புகிறாா். இக்கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்பதே தவிர, யாரையும் வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. தவறான புரிதலை சரிசெய்வோம்.
விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்து சீமான் கூறிய கருத்தை ஏற்கிறேன்.
பிரதமா் மோடி செய்த ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு மூலம் 300-க்கும் அதிகமான பொருள்களுக்கு விலைவாசி குறையவுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பாஜக அடிப்படையிலான 65 மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. மேலும், தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறோம் என்றாா் கருப்பு முருகானந்தம்.
அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.