தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்
தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். இது தொடா்பாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆணையம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட இந்த ஆணையத்தை பலவீனப்படுத்துவது, தலித் மக்களின் அரசமைப்பு மற்றும் சமூக உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும். இந்த ஆணையத்தை அன்றி, அரசில் வேறு யாா் தலித் மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பாா்கள்? அவா்களின் புகாா்கள் மீது யாா் நடவடிக்கை எடுப்பாா்கள்?
தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் விரைந்து நிரப்ப பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தலித் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணையத்தால் திறம்பட மேற்கொள்ள முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
தேசிய பட்டியலினத்தவா் ஆணையமானது, பட்டியலினத்தவரின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் கலாசார நலன்களை ஊக்குவித்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டதாகும். இந்த ஆணைய வலைதள தரவுகளின்படி, துணைத் தலைவா் மற்றும் ஒரு உறுப்பினா் பதவிகள் காலியாக உள்ளன.